வன்னி பகுதிகளில் இன்றும் (சனி) படையினர் ஆட்லறி கொத்துக் குண்டு தாக்குதல்: 65 தமிழர்கள் பலி; 226 பேர் காயம்
 
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2009
வன்னியின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமையும்  சிறிலங்கா படையினர் ஆட்லெறி பீரங்கிகள் மூலம் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளனர். இத்தாக்குதல்களில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 226 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
ஆட்லெறி பீரங்கியின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்ற போது அவற்றுக்குள்ளிருந்து சிறிய குண்டுகள் 50 மீற்றருக்கும் கூடுதலான விட்டப் பகுதிக்கு பறந்து சென்று குறித்த நேரத்தில் வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்துகின்றன.

தேவிபுரம்

முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் இன்று சனிக்கிழமை, சிறிலங்கா படையினர் 2 மணி நேரமாக நடத்திய எறிகணைத் தாக்குலில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, தேவிபுரம் - புதுக்குடியிருப்பு வீதியில், ஈருளிகளிலும், உந்துருகளிலும் மற்றும் ஊர்திகளிலும் மக்கள் செறிவாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது அவர்களை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 12:20  மணியளவில் சிறிலங்கா வான்படையின் "எஃப்-07" வானூர்திகள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் பயணித்துக் கொண்டிருந்த 6 ஈருளிகள், 4 உந்துருளிகள் என்பன முற்றாக அழிவடைந்துள்ளன.

அப்பகுதி மீது தொடர்ந்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்துவதால் படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்டு சிகிச்சை வழங்க முடியாத அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன என தெரிவிக்கின்றனர்.
இதே பகுதியை இலக்குவைத்து மீண்டும் பிற்பகல் 3:20 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் மேலும் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.இதில் பொதுமக்களின் 2 உழுஊர்திகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இதேவேளை தேவிபுரத்தில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 17 ஆல் உயர்ந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 54 ஆல் உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடலங்களும் காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதன்படி அங்கு கொல்லப்பட்ட தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆகவும் உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, முல்லைத்தீவு இரணைப்பாலை, ஆனந்தபுரம், கைவேலி ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதனால் தற்போது வீதியோரங்களிலேயே மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மரங்களில் கீழ்தான் அறுவைச் சிகிச்சைகள் கூட நடைபெறுகின்றன என அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online