வன்னியில் சிறிலங்கா படையினரின் வான், எறிகணை தாக்குதல் தொடர்கிறது: நேற்று 19 சிறுவர்கள் உட்பட 69 பேர் பலி; பலர் காயம் 

[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2009 ]
முல்லைத்தீவு பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் நேற்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான் மற்றும் ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களில் 19 சிறுவர்கள் உட்பட 69 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலானோர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா வான்படையினர் முல்லைத்தீவு பகுதிகளில் 5 வது நாளாக தொடர்ந்து குண்டுத் தாக்குலை நடத்தியுள்ளனர்.  நேற்று சிறிலங்கா வான்படையின் இரு விமானங்கள் காலை 8.00 மணிக்கும் பின்னர் 11.30 மணிக்கும்  மாத்தளன் வைத்தியசாலை பகுதியில் குண்டுத்தாக்குதல் நடாத்தியதில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன் முள்ளிவாய்க்கால், இரட்டை வாயக்கால் பகுதிகளை இலக்கு வைத்து படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் சுமார் 40 போதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்துமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதுமாத்தளன் வைத்தியசாலை மருந்துப் பொருட்கள் தீரந்துள்ளமையினால் நேற்று மூடப்பட்டுள்ளதாக டாக்டர் வரதராசா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக காயமடைந்த பலர் வைத்திய சிகிச்சை இன்றி இறக்க நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேநிலையில் நேற்று செஞ்சிலுவை சங்கத்தினர் 420 நோயாளிகளை திருகோணமலைக்கு கப்பலில் கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் புதுமாத்தளனில் 600 தொடக்கம் 800 வரையான படுகாயமடைந்த நோயாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளின்டன் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாதுகாப்பு வலய பிரதேசங்களில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என வலியுறுத்தியதன் பின்னரும் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online