வன்னியில் காயமடைந்துள்ள 25,000 பொதுமக்களையும் காப்பாற்றுமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள்: கடற்புலிகள் தளபதி கேணல் சூசை
 
 
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009,  ]
 
வன்னியில் சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான ஆட்லறித் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை எதுவுமின்றி சாவின் விளிம்பில் தவித்துக்கொண்டிருக்கும் 25,000 பொதுமக்களையும் காப்பாற்ற உதவுமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் விசேட தளபதி கேணல் சூசை சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஊடாக இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார். அப்பகுதியில் இருந்த மருத்துவமனை படையினரால் அழிக்கப்பட்டு மருத்துவர்களும் முற்றாக வெளியேறிய நிலையில் அங்கு காயமடைந்து பரிதவிக்கும் பொதுமக்கள் எதுவித சிகிச்சையுமின்றி இறந்துகொண்டிருக்கின்றனர்.
அத்துடன் பதுங்குகுழிகளுக்குள் ஆயிரக்கணக்கானோர் மண்ணினால் புதையுண்ட நிலையில் இறந்துள்ளனர். ஆங்காங்கே சிதறிய நிலையில் கிடக்கும் இறந்தவர்களின் உடலங்களை படையினரின் தொடர்ச்சியான தாக்குதல்களினால் அடக்கம்கூட செய்ய முடியாத அவலநிலைக்கு வன்னிப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக பதுங்குகுழிகளுக்குள்ளேயே பலர் தங்கியிருப்பதால் உணவு, நீர் கூட அருந்தாமல் பட்டினியால் பெரும் எண்ணிக்கையானவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நிலையில் உயிருக்காக பரிதவிக்கும் பொது மக்களை, மீட்பதற்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.அவர்களை வட்டுவாகல் மற்றும் இரட்டைவாய்க்கால் பகுதிகளின் ஊடாக மீட்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சடலங்கள் சிதறிக்கிடக்கின்ற சுமார் இரண்டு கிலோமீற்றர் நிலப்பரப்புள்ள பகுதியில், பொதுமக்கள் பலர் பதுங்கு குழிகளில் மறைந்துள்ள நிலையில் இராணுவம் அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராணுவம் பொது மக்களை மீட்காது, பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்பி வரும் பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
25000 பேர் காயமடைந்து செத்துக் கொண்டிருக்கும் போதும், சர்வதேச சமூகம் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் 50ஆயிரம் மக்களை தாம் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளபோதும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் காயமடைந்துமுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இருதரப்பும் மிக அண்மித்த தூரத்தில் நின்று துப்பாக்கிச் சமர் மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த இறுதித் தருணத்திலாவது, அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, இறுதியாக வன்னியில் இருந்து கிடைத்த தகவல்களின் படி, பாதுகாப்பு வலய பிரதேசத்தில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை இராணுவத்தினர் தடுத்து வைத்துள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கி பிரயோத்தை நடத்தி வருவுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை கடந்த சில மணிநேரத்தின் முன்பு கேணல் சூசை தமக்கு தெரிவித்த தகவல்களை, தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகார உறவு பொறுப்பாளர் பத்மநாதன் தமிழ் மக்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சர்வதேசத்திடம் அறிக்கை மூலம் கேட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் பத்மநாதன் தெரிவிக்கையில் இன்றைய தருணத்தில் இதுதான் தேவை. இதன் மூலமாக ஆயிரக்கணக்கான மக்களுடைய உயிர்களைப் பாதுகாக்க முடியுமாயின் அது செய்யப்பட வேண்டும்.
எமது மக்களுக்காகவேதான் நாம் போராடுகின்றோம் என்பதை நாம் மறந்துவிடவில்லை. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில், எமது மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துவதற்கு இந்த போரை சிங்கள அரசு பயன்படுத்துவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
நாம் எமது துப்பாக்கிகளை மெளனிப்பதற்கு தயாராவிருக்கின்றோம். எமது மக்களைப் பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் தொடர்ந்தும் கோருவதைவிட எம்மிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லை." இவ்வாறு பத்மநாதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முள்ளிவாய்க்கால் பகுதியை முற்றாகக் கைப்பற்றி இருப்பதாகப் பிரசாரம் மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசாங்கம், அந்தப் பகுதியில் எஞ்சியிருந்தவர்கள் சரணடைய அவகாசம் வழங்காது பாரிய இன அழிப்பை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கான தாக்குதல்கள் நாலாபுறமும் இருந்து மேற்கொள்ளப்படு வருகின்றன.
இதனைத் தடுப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் கால தாமதம் அடைந்தால், பல்லாயிரக்கணக்கான மக்கள் சாட்சியின்றி இனப் படுகொலை செய்யப்படலாம் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online