மருத்துவர் சண்முகராஜா படுகாயம்: மருத்துவர்கள் வரதராஜா, சத்தியமூர்த்தி, மேலதிக அர.அதிபர் பார்த்திபன் வவுனியாவில் தடுத்துவைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, ]
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் தாக்குதல் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில் கூட அங்கு நின்று படுகாயமடைந்தவர்களுக்கு அயராது சிகிச்சையளித்துக் கொண்டிருந்த ஆறு மருத்துவர்களும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் ஒருவர் படுகாயமடைந்திருப்பதால் அவசர சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அதேவேளையில் மற்றையவர்கள் ஓமந்தை சோதனைச் சாவடியில் விசாரணைகளுக்கான தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அது தாக்கியழிக்கப்படும் வரையில் பணியாற்றிய மருத்துவ அத்தியட்சகர் சணண்முகராஜாவும் அவரது குடும்பத்தினரும் சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர்களான மருத்துவர்கள் வரதராஜா, சத்தியமூர்த்தி உட்பட ஆறு மருத்துவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறி சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு நேற்று சனிக்கிழமை வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வரும்போது இடம்பெற்ற தாக்குதல்களில் மருத்துவர் சண்முகராஜா படுகாயமடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இவர் வவுனியாவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக என உலங்குவானூர்தி மூலமாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் எங்கே கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாக இராணுவ அதிகாரிகளும் தகவல்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
மருத்துவர்கள் வரதராஜா, சத்தியமூர்த்தி ஆகியோர் ஓமந்தை சோதனைச் சாவடியில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில் இவர்களுடன் முள்ளியவளையில் இருந்து வெளியேறி வவுனியா வந்து சேர்ந்த மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்திபன் வவுனியா இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் பணிபுரிந்த மருத்துவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்ட நிலையில், மருத்துவத் தொண்டர்கள் சிலர் மட்டுமே அங்கிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த நான்கு தினங்களாகப் படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் கடுமையான தாக்குதலில் படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு முடியாத நிலையில் இவர்கள் இருப்பதுடன் தேவையான மருத்துவ வசதிகளோ மருந்துகளோ அங்கில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online