18-MAY-2009 தமிழின அழிப்பின் இறுதிக் கட்டம், சிங்களப் படையின் கனரக பீரங்கிகளின் தாக்குதலோடு தொடங்கிவிட்டது: காயமடைந்தோரின் மரண ஓலத்தில் முள்ளிவாய்க்கால்!
at திங்கள், ஏப்ரல் 25, 2011தமிழின அழிப்பின் இறுதிக் கட்டம், சிங்களப் படையின் கனரக பீரங்கிகளின் தாக்குதலோடு தொடங்கிவிட்டது: காயமடைந்தோரின் மரண ஓலத்தில் முள்ளிவாய்க்கால்!
[ திங்கட்கிழமை, 18 மே 2009, ]
கடந்த இரண்டரை வருடங்களாக, உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன், சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் எஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவே வன்னியிலிருந்து வரும் இறுதி தகவலாக இருக்கும் எனத் தெரிவித்து அங்கிருந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இரு
ந்து வந்து எங்கள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன.
கனரக மற்றும் சிறுரக துப்பாக்கி சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன.
தாக்குதல் நிகழும் இந்த பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர்.
காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின் மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன.
விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த் தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும் சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களாலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடலங்களும் நாலா புறமும் சிதறிக்கிடக்கின்றன.
திரும்பிய பக்கம் எல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடலங்கள் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாத காரணத்தினால் அந்த பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது.
இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறிலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர்.
படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதி எங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர்.
படு மோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள் மக்கள் அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக்கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர்.
அதேபோல காயமடைந்து, சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள் தமக்கு 'சயனைட்' வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர்.
பதுங்கு குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடலங்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காய் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது.
இவ்வாறு கூறிய அத் தகவலில் கடைசியாக "இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டுவிடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சொல்லிவிட்ட பின்பு, யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும் போது, மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)