தமிழர்களுக்கு குரல் தந்த ஒபாமாவுக்கு நன்றி: விடுதலைப்புலிகள்
 
[ வியாழக்கிழமை, 14 மே 2009,  ]
 
இலங்கை அரசை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசியிருப்பதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பேச்சை வரவேற்கின்றனர், நன்றி கூறுகின்றனர்.
ஈழத்தில் தமிழர்கள் படும் துயரம் குறித்து அவர் பரிவுடன் பேசியதற்காகவும், மனிதாபிமான நெருக்கடியை நிறுத்த அவர் விடுத்துள்ள கோரிக்கைக்காகவும் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அதேபோல, ஐ.நா. பாதுகாப்பு சபையும், ஐ.நா. அவையும், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான முறையில் விவாதித்ததையும், ஈழத் தமிழர்களைக் காக்க விடுத்த வேண்டுகோளையும் நாங்கள் வரவேற்கிறோம்.
மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அதிபர் ஒபாமாவின் தலையீட்டை ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
அதிபர் ஒபாமா கூறியதுபோல, பாதுகாப்புடன் கூடிய, நீடித்த அமைதிக்கு இலங்கை அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்பதை நாங்களும் ஆதரிக்கிறோம். மேலும், அமைதியை நோக்கிய நிரந்தர போர் நிறுத்தத்திற்கும் நாங்கள் ஆதரவு தருகிறோம்.
நாங்கள் வைத்துள்ள ஆயுதங்கள், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அமைதியான இறுதித் தீர்வை பாதுகாப்பதற்காகத்தான்.
இன்று இலங்கை அரசு, ஈழத்தில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களையும் ஒட்டுமொத்தமாக தண்டித்துக் கொண்டிருக்கிறது. தங்களது சுய நிர்ணயத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழர்களை அது தண்டித்துக் கொண்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களை அவர்களது சொந்த நிலத்திலிருந்து இலங்கை அரசு அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது. எந்தவித மரியாதையும், கௌரவமும் இல்லாத முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது.
தமிழர்களின் நிலங்களுக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருக்கும் தமிழர்களையும், அரசுப் பகுதிகளுக்கு வந்த தமிழர்களையும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி அழித்து வருகிறது.
இடம் பெயர்ந்து வரும் அப்பாவி மக்களை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காணவில்லை. இவற்றை எந்தவித சாட்சியமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
அதிபர் ஒபாமா கூறுவதைப் போல, தமிழர்களை பேரழிவிலிருந்து காக்க, மனிதாபிமான நெருக்கடியிலிருந்து மீட்க அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
சர்வதேச சமுதாயத்தின் கண்களை மூடி விட்டு, இலங்கை அரசு தனது தாக்குதல்களை தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிரது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி உலக சமுதாயத்தை அது ஏமாற்றி வருகிறது.
மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளைக் கூட அது ஏற்கவில்லை. அனுமதிக்கவில்லை.
இந்த சமயத்தில், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசுக்கு அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்திருப்பதற்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம்.
தற்போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுயேச்சையான மனிதாபிமான உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அவர்கள் இப்பகுதிகளுக்கு குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்காக நேரம் ஒதுக்கி, அவர்களுக்காக பேசிய அதிபர் ஒபாமாவுக்கு நாங்கள் மீண்டும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் நடேசன்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online