சிறிலங்காப் படையினரின் தொடர் குண்டு மழையினால் மரண பூமியாக மாறியுள்ள முள்ளிவாய்க்கால்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு புறங்களிலும் சுற்றிவளைத்துள்ள சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் சிறிய பகுதி மீது இடைவிடாது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருப்பதாக இன்று காலை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இடைவிடாத குண்டு மழையினாலும், தொடர்ச்சியாக உணவோ, குடிதண்ணீரோ இல்லாமல் பதுங்குகுழிகளுக்குள் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இருப்பதாலும் பெருமளவு தமிழர்கள் உயிரிழக்கும் நிலையில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனைவிட நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், உடல் உறுப்புக்களை இழந்து மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் இரத்தம் பெருகிய நிலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருந்து கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினர் நான்கு புறங்களிலும் இருந்தும் மேற்கொள்ளும் கனரக தாக்குதல்களை சில நிமிட நேரம் கூட இடைநிறுத்தவில்லை எனவும், கடுமையான காயங்களுக்குள்ளான ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்கான வசதிகள் எதுவும் இல்லாமல் மரணிக்கும் தறுவாயில் இருப்பதாகவும் அப்பகுதியில் இருந்து மரண ஓலங்களே கேட்டுக்கொண்டிருப்பதாகவும் இன்று காலை கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவர்களின் உடலங்களும், படுகாயமடைந்த நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களையும் தான் அந்தப் பகுதி எங்கும் காணக்கூடியதாக இருக்கின்றது.
தாக்குதல்கள் தொடர்வதால் உயிருக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உடனடி உதவிகளைக் கூட செய்ய முடியாத நிலையில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் கூட இருக்கின்றனர்.

முள்ளிவாய்க்காலின் அனைத்துப் பகுதிகளிலும் மிகவும் நெருக்கமாக நேருக்கு நேரான மோதல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online