வன்னியில் படையினரின் எறிகணை வீச்சில் நேற்று (புதன்) 34 பொதுமக்கள் படுகொலை; 46 பேர் காயம்: மருத்துவமனை மீதும் தாக்குதல்
 
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009
முல்லைத்தீவு மாவட்டம் தேவிபுரம், வள்ளிபுனம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

நீண்ட தூர போக்குவரத்து, சீரற்ற பாதை, மக்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருப்பதால் ஏற்பட்ட நெரிசல், சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் என்பவற்றால் காயமடைந்தோரை மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தாமதமும் காயமடைந்தோர் அநியாயமாக உயிரிழக்க காரணமாகி விட்டன.

மருத்துவமனை மீது தாக்குதல்

இதேவேளை, தேவிபுரத்தில் இயங்கி வரும் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது நேற்று அதிகாலை 1:00 முதல் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  அப்பகுதியை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதனால்  மருத்துவமனையில்  இருக்கும் நோயாளர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online