சிறிலங்கா படையின் பாரிய தாக்குதலால் பாதுகாப்பு வலயம் புகைமண்டலம். பேரழிவை நோக்கி மக்கள்.
 
[ வெள்ளிக்கிழமை, 15 மே 2009,]
ராஜபக்ஷ சகோதரர்கள் விடுத்த "அடுத்த 48 மணித்தியாலத்தில் பாதுகாப்பு வலயம் படையினர் வசம்"என்ற அறிவித்தலைத் தொடர்ந்து பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசிக்கும் நோக்குடன், சிறிலங்கா படையினர் தமது முழுப்படைக்கல சூட்டாதரவைப் பயன்படுத்தி இன்று காலை முதல் மிகக்கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
ஆட்டிலறி எறிகணை, பல்குழல் எறிகணை, பீரங்கித் தாக்குதல், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், துப்பாக்கித் தாக்குதல் என்பவற்றின் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு, மக்கள் வாழும் கடற்கரைப் பகுதியை நோக்கி முன்னேறிவரும் சிறிலங்கா இராணுவம் வெள்ளைப் பொசுபரசு குண்டுகளையும் பயன்படுத்துகின்றது.
இதனால் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 75 வீதமான மக்கள் பதுங்குகுழிக்குள்ளே அடைபட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவரமுன்னர் பாதுகாப்பு வலயத்தை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்றே இம் மூர்க்கத்தனமாக பாரிய நடவடிக்கையை சிறிலங்கா அரசு மேற்கொண்டு அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களை நடாத்துகின்றனர்.

 இதுவே தமது இறுதிக்கட்ட படை நடவடிக்கை எனக் கூறிவிட்டே, படையினர் இன்றைய தாக்குதலை ஆரம்பித்திருப்பதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருப்பர் எனவும் அஞ்சப்படுகின்றது.

ஏற்கனவே கொல்லப்பட்ட பொதுமக்களின் பல நூற்றுக்கணக்கான உடலங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதாகவும், படுகாயமடைந்த மக்களிற்குரிய மருத்துவ உதவிகளை வழக்க முடியாது பதுங்கு குழிகளுக்குள் அனைவரும் முடங்கிக் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை அறியமுடியாதுள்ளது.
சிறிலங்காவின் 53, 58, 59 ஆகிய கஜபா, விஜபா படையணிகளே இந்த தாக்குதல்களை தொடங்கியிருப்பதாக தெரியவருவதோடு, இந்த படையணிகள் கனரக ஆயுதங்களையும் போர் டாங்கிகளையும் பீரங்கிகளையும் இரசாயன ஆயுதங்களையும் கொண்டு மக்கள் "பாதுகாப்பு வலய'த்தை நோக்கி அகோரமாகத் தாக்கி வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக கரையோரமாக தாக்குதல்களை நடத்தியவாறு நகர்ந்த 53, 58 ஆவது படையணிகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலைகொண்டவாறும், 59 ஆவது படையணி வெள்ளமுள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளை அண்மித்து நிலைகொண்டவாறும் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது செறிவான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலால் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கின்றதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இந்த தொடர் தாக்குதல்களால் பதுங்கு குழிகளுக்குள் அகப்பட்டுள்ள மக்களுக்கு நீண்ட நாட்களாக குடிதண்ணீர், உணவு எதுவுமே கிடைக்காத நிலையில் பசிக்கொடுமையாலும் அவர்கள் உயிர் மடிந்து வருவதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா படையினரது இன்றைய மிகக்கொடூரமான தாக்குலால், ஒரு இலட்சத்து 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online