பாதுகாப்பு வலய பிரதேசத்தில் படையினரின் எறிகணையில் கடந்த 3 நாட்களில் 102 பொதுமக்கள் படுகொலை
 
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2009]
வன்னியில் சிறிலங்கா அரசினால் பிரகடனம் செய்யப்பட்ட பாதுகாப்பு வலய பிரதேசத்தில் சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகோர எறிகணைத் தாக்குதல்களில் சிறுவர்கள்  அடங்கலாக 102  பொதுமக்கள்  படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் நேற்று வெள்ளிக்கிழமை  மட்டும் 49  பொதுமக்கள்  படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
புதுமாத்தளனில் நேற்று வெள்ளிக்கிழமை தற்காலிக தரப்பாழ்களாலான குடிசைகள்  மீது வீழ்ந்த எறிகணையில் அதற்குள் தங்கியிருந்த 16 பொதுமக்கள்  கொல்லப்பட்டிருந்தனர்.

இதேபோன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் காயமடைந்த மக்களை ஏற்றிச் செல்லும் கடற்கரைப் பகுதியில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் முற்பகல் 11:00 மணியளவில் வீழ்ந்த வெடித்த எறிகணையில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதேவேளை நேற்று முன்தினம்  வியாழக்கிழமை 11 சிறுவர்கள் உட்பட 39 பொதுமக்களும்,  அதற்கு முன்தினம் புதன்கிழமை 17 பொதுமக்களும்  சிறீலங்கா படையினரது மூர்க்கத்தனமான எறிகணைத் தாக்குதலில் பாதுகாப்பு வலய பிரதேசத்தில் கொல்லப்பட்டனர்.
அத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் பொக்கணையில் வீழ்ந்த எறிகணை ஒன்றில் குடிசையில் தங்கியிருந்த 6 பொதுமக்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டனர்.
இதேபோன்று முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், மற்றும் வலைஞர்மடம் போன்ற பாதுகாப்பு வலயப் பிரதேசங்களிலும் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 11.00 மணியளவில் பொக்கணை மற்றும் மாத்தளன் ஆகிய பாதுகாப்பு வலய பிரதேசங்களிலும் சிறிலங்கா படையினரால் கடும் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online