வன்னியில் சிறிலங்காவின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு தொடர்கிறது; இன்று (ஞாயிறு) மட்டும் 80 அப்பாவிகள் பலி, 200 பேர் காயம்
 
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2009
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில், இதுவரை  80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200  பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியில் இருந்து பிற்பகல் 3:00 மணிவரை சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இரண்டு மைல் நீள தூரத்துக்கு, மிக நெருக்கமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தபோது, சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி வட்டமிட்டு நோட்டம் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த பீரங்கித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர ஊர்திகளிலும் மற்றும் நடந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த வேளையில் மக்களை வேண்டும் என்றே இலக்கு வைத்து வெறித்தனமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் என பெருமளவு தமிழர்கள் உடல் சிதறிக் கொல்லப்பட, மேலும் பெருமளவிலானோர் படுகாயமடைந்து வீழ்ந்த பெரும் அவலம் அங்கு நிலவியது.
வள்ளிபுனம் பகுதியில் பதுங்குகுழிக்குள் 3 பேர் பலியாகியும் 4 பேர் காயமுற்றிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் 40 பேர் சிறுவர்களும், பெண்களும் என நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் உடல்களையோ, அல்லது காயமடைந்து வீழ்ந்தோரையோ மீட்டு எடுக்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினர் தொடர்ந்து கடுமையான பீரங்கி தாக்குதல்களை நடத்தி வந்தனர் எனவும், இதனால் காயமடைந்தோரை மீட்க முற்பட்டவர்களும் காயங்களுக்கு உள்ளாகி வீழ்ந்தனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிற்கல் 3:00 மணியளவில் எறிகணைத் தாக்குதல் ஓய்ந்து 7 மணித்தியாலங்களின்  பின்பு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டபோது, காயமடைந்த பலர் குருதிப்போக்கினால் இறந்து போயிருந்தனர். இறந்தவர்கள் போக, காயமடைந்த நிலையில் 200 பேர் மீட்கப்பட்டனர்.

காயமடைந்தோர் பலர் மீட்கப்பட்ட போதும் தற்போது மருத்துவமனைகள் எதுவும் வன்னியில் இல்லாத நிலையில் மரங்களின் கீழும், கொட்டகைகளின் கீழம், வெறும் பாய்களின் மீது வைத்தே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இருந்தாலும் மீட்புப் பணிகளை முழுமையாக செய்யப்பட முடியாத அளவுக்கு வன்னியில் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்துப் பாதையான பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மீட்புப்பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
ஊர்திகள் பலவற்றின் மேல் பீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததால், அவற்றில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பல தமிழர்கள் குடும்பம் குடும்பமாக, ஒட்டுமொத்தமாக, அழிக்கப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சிதறிய உடலங்களும், இரத்தச் சிதறல்களும், சிதறிய உடமைகளும், தீர்ப்பற்றி எரிந்து கொண்டிக்கும் ஊர்திகளுமாக, அந்த இடம் பெரும் அவலம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500 குடிசை வீடுகளும் முற்றாக அழிவடைந்தன.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online