முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி இன்று இரவு மீண்டும் எரிகுண்டு எறிகணைத் தாக்குதல்: பெருந்தொகையானோர் பலி
 
[ ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009 ]
சிறிலங்கா அரசாங்கம் புதிதாக அறிவித்துள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மீது படையினர் இன்று இரவு மீண்டும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்ட 48 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளையில் அப்பகுதி தொடர்ந்தும் தீப்பற்றி எரிந்து வருவதால் மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருக்கும் ஆழிப்பேரலை வீட்டுத் திட்டப் பகுதி மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் மீண்டும் கடுமையான எரிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மக்கள் தற்காலிகமாக அமைத்து வாழ்ந்து வந்த 35 கூடாரங்கள் எரிந்து முழுமையாகவே நாசமாகியுள்ளன. அப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்த 18 உழவூர்திகள், எட்டு பார ஊர்திகள் என்பனவற்றுடன் ஆழிப்பேரலை நிவாரணத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நான்கு வீடுகளும் எரிகுண்டு எறிகணைத் தாக்குதல்களால் முழுமையாக எரிந்து சாம்பராகியுள்ளன.
இவற்றுக்குள் சிக்கி பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை அப்பகுதியில் இருந்து 48 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து அப்பகுதி எரிந்து கொண்டிருப்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online