48 மணி நேரத்திற்குள் 1700 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3000க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
 
[ வியாழக்கிழமை, 14 மே 2009,  ]
வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழ் மக்கள் 1700 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மூவாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களால் கடந்த 48 மணி நேரத்தில் வன்னிப் பகுதியில் 1,700 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, வன்னியில் உள்ள மருத்துவமனைகளை கைவிட்டு பதுங்குகுழிகளுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களால் கடந்த 48 மணி நேரத்தில் வன்னிப் பகுதியில் 1,700 பொதுமக்கள் கொல்லப்பட்டு, 3,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் இருப்பதாக உள்ளுர் உதவி நிறுவனங்களின் பணியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த அவலமான நிலை உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் மேலும் மோசமடைந்திருக்கின்றது.

உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் அவசர உதவிப் பொருட்களுடன் வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உணவுக் கப்பல், விடுதலைப் புலிகள் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கிய போதிலும் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காமையால் உணவுப் பொருட்களை விநியோகிக்காமல் திரும்பிச் சென்றது. அவசர மருத்துவ உதவி தேவையானவர்களை ஏற்றிச்செல்வதற்காக வந்த மற்றொரு கப்பலும் இதே காரணங்களுக்காக தடுக்கப்பட்டது.

இடைவிடாத தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களால் 1,400 நோயாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் நோயாளர்களைப் பராமரிப்பதற்காக யாரும் இல்லாமையினால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அனைத்து மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனையைக் கைவிட்டு பதுங்குகுழிகளுக்குள் சென்றுவிட்டனர்.

இந்த மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு முற்பட்ட உள்ளுர் மருத்துவர்கள், அவற்றை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் மருத்துவமனைகள் மீதான குண்டுத் தாக்குதல்கள் தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே இந்தத் தீர்மானத்தை அவர்கள் எடுத்திருக்கின்றனர்.

அனைத்துலகத் தலைவர்களால் வெளியிடப்பட்ட கண்டனங்களுக்கு மத்தியிலும் சிறிலங்கா ஆயுதப் படையினர் தொடர்ச்சியாக பொதுமக்களையும் அவர்களுடைய குடியிருப்புக்களையும் இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதப் படுகொலையில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவற்றைச் செயற்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த மனிதாபிமானப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அனைத்துலக சமூகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்படுவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தயாராகவிருக்கின்றது."

இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online