வன்னியில் இன்று (ஞாயிறு) காலை 38 தடவைகள் வான் தாக்குதல்: 32 பொதுமக்கள் படுகொலை; 48 பேர் படுகாயம்
 
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2009,  ]
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்காவின் வான்படையின் வானூர்திகள் இன்று நடத்திய குண்டுத் தாக்குதல்களில் 32 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு வலய பகுதி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கும் பின்னர் 10:15 நிமிடத்துக்கும் மீண்டும் 11:00 மணிக்கும் சிறிலங்கா வான்படையினர் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
முற்பகல் 11:00 மணிவரை சிறிலங்கா வான்படை 38 குண்டுகளை வீசியுள்ளது. மிக், கிபீர் மற்றும் எஃப்-7 ரக வானூர்திகள் மாறி, மாறி வந்து குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இத்தாக்குதல்களில் 32 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
பெருமளவிலான மக்களின் கூடாரங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா வான்படை தொடர்ச்சியாக குண்டுகளை வீசி வருவதால் மக்கள் பேரவலத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வட பகுதியில் இடம்பெறும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நிலைமையை நேரில் அவதானிப்பதற்காகவும், சிறிலங்காப் பிரமுகர்களையும் சந்திப்பதற்காகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான மற்றும் அவசரகால உதவி இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் நேற்று சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online