பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இதுவரை 4,100 பொதுமக்கள் பலி; 8,800 பேர் காயம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை

[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009, ]

வன்னியில் கடந்த மூன்று மாதத்தில் அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் மட்டும் 4 ஆயிரத்து 100 அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 8 ஆயிரத்து 800 தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு:

குறிப்பாக கடந்த சில நாள்களில் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மனிதப் பேரவலம் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. கடந்த 9 நாள்களில் மட்டும் 707 பொது மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரம் பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.

அங்கு மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டமையினால் மனிதப் பேரவலம் தீவிரமாக்கப்பட்டுள்ளது. உணவு, மருந்துப் பொருள்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரானது. முன்னர் ஒரு போதும் எதிர்நோக்காத இன்னல்களை தற்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

பாதுகாப்பு வலயத்திலேயே மக்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்து வருகின்ற அதேவேளை, தமிழ் மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமற் போயுள்ளனர்.

இலங்கை அரசு தற்போது பாதுகாப்பு வலயத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அங்குள்ள மூன்று இலட்சம் மக்களை அழிப்பதற்கான முயற்சியே இதுவாகும்.

எனவே சர்வதேச சமூகமும் இந்தியாவும் இணைந்து உடனடியாக இராணுவ நடவடிக்கை நிறுத்தி யுத்த நிறுத்தத்தை அறிவிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றுள்ளது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online