புதுமாத்தளன் வைத்தியசாலை மீது படையினர் தாக்குதல்: வைத்திய அதிகாரி தெரிவிப்பு; இராணுவம் மறுப்பு

[ வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009, ]

புதுமாத்தளன் வைத்தியசாலையின் மீது கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலின் போது 18 மாதக் கைக்குழந்தை மற்றும் வைத்தியசாலையின் பணியாளர் ஒருவர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதுடன் 300 பேர் படுகாயமடைந்ததாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி த. சத்தியமூர்த்தி சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கியுள்ள வைத்திய அதிகாரி மேலும் கூறியுள்ளதாவது

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இறுதி வைத்தியசாலையாக மேற்படி புதுமாத்தளன் வைத்தியசாலை விளங்குகின்றது. அதன் மீது கடந்த புதன்கிழமை இராணுவத்தினர் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதன் போது வைத்தியசாலையின் பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

குறித்த தாக்குதல் நடத்தப்படும் போது மேற்படி வைத்தியசாலைக்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைகளுக்காக வந்திருந்தனர்.

இதன்போது திடீரென ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. இவை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தே வந்தன என்றார் வைத்திய அதிகாரி த.சத்தியமூர்த்தி. அவரது கருத்து தொடர்பில் கேட்டபோதே பிரிகேடியர் மேற்கண்டவாறு கூறினார்.

முல்லைத்தீவு, புதுமாத்தளன் வைத்தியசாலை மீது படையினர் எக்காரணம் கொண்டும் ஷெல் தாக்குதலை நடத்தவில்லை.

குறித்த வைத்தியசாலை உள்ளிட்ட அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதலை நடத்த வேண்டிய அவசியம் படையினருக்கு இல்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுமாத்தளன் வைத்தியசாலையின் மீது படையினர் ஷெல் தாக்குதலை நடத்தினர் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டிலும் எவ்வித உண்மையும் இல்லை. இதனை படையினர் முற்றாக மறுக்கின்றனர். என்றார் பிரிகேடியர் உதய நாணயக்கார.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online