வன்னியில் நேற்று சிறுவர் பராமரிப்பு நிலையம் மீது படையினர் தாக்குதல்: 150 பொதுமக்கள் படுகொலை; 100 சிறுவர்கள் உட்பட 296 பேர் காயம்

[ புதன்கிழமை, 08 ஏப்ரல் 2009, ]

வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியில் பொக்கணை பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 150 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100 சிறுவர்கள் உட்பட 296 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று சிறிலங்கா படையினர் நடத்திய கண்மூடித்தனமான ஆட்லறி, கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களிலேயே குறித்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொக்கணையில் உள்ள சிறுவர் பாதுகாப்பு நிலையத்தை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட 3 எறிகணை வீச்சுகளினால், பொது மக்களுடன் சிறுவர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

அத்துடன் சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான பால்மா பெறுவதற்காக வரிசையில் காத்து நின்ற மக்கள் மீது இன்று காலை 7:00 மணியளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பெருமளவிலானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டோரில் 47 பேர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் இன்று மாலை வரை மேற்கொள்ளப்பட்டதனால், அதிக அளவிலான சிறுவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் தகவல்கள் எதனையும் திரட்ட முடியாத நிலையில் இருப்பதாக புதுமாத்தளன் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இறுதியாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 40 தொடக்கம் 80 வரையான சிறுவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இன்று புதன்கிழமை உட்பட கடந்த மூன்று நாட்களில் வன்னிப் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் 200 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 500 க்கு அதிகமான பொதுமக்கள் காயமடைந்துமள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் கடந்த திங்கட்கிழமை 43 பேர் கொல்லப்பட்டும் 102 பேர் காயமடைந்துள்ளதாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை 39 பேர் கொல்லப்பட்டும், 61 பேர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் உயிரிழந்த பொதுமக்களின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online