வன்னி அவலம்: ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படும் பலர் பித்துப்பிடித்தவர்களாக உள்ளனர்; தாகத்தால் ஏற்பட்ட வரட்சியால் இறக்கின்றனர்: மருத்துவர்கள் தெரிவிப்பு
 
[ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009, ]
 
மோதல் பகுதியிலிருந்து வெளியேறியுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களில் பெருந்தொகையானோர் மோசமான படுகாயங்களுடனும் நோயுடனும் ஆஸ்பத்திரிகளுக்கு வருவதாக மருத்துவர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும்போது சிலர் வாகனங்களில் இறந்துவிடுகின்றனர். அத்துடன், தமது அன்புக்குரியவர்கள் தமது கண்முன்னால் கொல்லப்படுவதைக் கண்ட பலர் நினைவாற்றல் அற்றவர்களாக பித்துப்பிடித்தவர்களாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காயமடைந்து கொண்டு வரப்பட்டவர்களில் முக்கால்வாசிப் பேர் குண்டுவெடிப்பினால் காயமடைந்தவர்களாகும். ஏனையோர் துவக்குச்சூடு, கண்ணிவெடிகளால் காயமடைந்தவர்களாகும் என்று வவுனியா ஆஸ்பத்திரியில் பணியாற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த போல் மக்மாஸ்ரர் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
கால்களின் கீழ்ப்பகுதியில் கடும் காயமடைந்தவர்களாக பலர் உள்ளனர். நாம் அவற்றை அகற்ற வேண்டியுள்ளது. 19 வயது பெண் ஒருவர் குழந்தைக்கு பாலூட்டுபவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவரின் காலில் பாரிய பகுதியை நாம் அகற்ற வேண்டியிருந்தது. அவரினதும் பிள்ளையினதும் எதிர்காலம் குறித்து எனக்கு திகைப்பாக இருக்கிறது என்று அந்த மருத்துவர் கூறியுள்ளார்.
பலர் அதிர்ச்சியடைந்தவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்கு உளரீதியான ஆதரவு தேவையெனவும் அவர்கள் உடல், உள ரீதியாக சித்திரவதைக்குள்ளாகியிருப்பதாகவும் புல்மோட்டை வைத்தியசாலையிலுள்ள டாக்டர் ஈ.ஜி. ஞானகுணாளன் கூறியுள்ளார்.
ஒரு பெண் ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அவர் தனது கணவன் பிள்ளைகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது வீட்டின்மீது ஷெல் வீழ்ந்துள்ளது. கணவனும் பிள்ளைகள் சிலரும் இறந்துவிட்டனர். இப்பெண் தனது இரு கால்களையும் இழந்துள்ளார். அழுதுகொண்டிருக்கும் அப்பெண் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்.இதனைப் போன்று பல துக்கமான சம்பவங்கள் உண்டு என்று டாக்டர் ஞானகுணாளன் கூறியுள்ளார்.
மார்ச் நடுப்பகுதி வரை 6400 பேருக்கு இந்த வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 பேருடன் ஒவ்வொரு வாரமும் மூன்று தொடக்கம் நான்கு கப்பல்கள் மோதல் பகுதியிலிருந்து ஆட்களை ஏற்றி வருவதாக ஞானகுணாளன் கூறியுள்ளார்.
ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவதாகவும், இருவர் ஒரு கட்டிலிலும் மற்றொருவர் கட்டிலுக்கு கீழேயும் தங்கியிருப்பதாகவும் இலங்கையிலுள்ள எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லிசாபெத் லிஸ்ற் ராய்ட்டருக்கு தெரிவித்தார். நடைபாதைகளில் பலர் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் வார்ட் ஒன்றில் அதிகளவானோர்
அனுமதியளிக்கப்பட்டதால் சகல கட்டில்களையும் ஒன்றாக சேர்த்து நோயாளரை அனுமதித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், மோதல் பகுதியிலிருந்து வருவோர் பசியுடனும் தாகத்துடனும் காணப்படுகின்றனர். முகாமை வந்தடைந்த ஒருவர் தாகத்தால் ஏற்பட்ட வரட்சியால் மயங்கி வீழ்ந்து இறந்ததை பணியாளர்கள் பார்த்ததாக லிஸ்ற் தெரிவித்தார்.
அதேசமயம், மோதல் பகுதியிலிருந்து வருவோர் மிக மோசமான நிலையில் இருப்பதாக இலங்கையிலுள்ள ஐ.நா. பேச்சாளர் ஜோர் டொன் வெய்ஸ் கூறியுள்ளார்.
முகாம்களிலுள்ள சிறுவர்களில் கால்வாசிப் பேர் போஷாக்கின்றி இருப்பதாகவும் ஆரோக்கியமின்றி காணப்படுவதாகவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online