முல்லைக் கடற்கரைப் பகுதிகளில் 40,000 குடும்பங்களைச் சேர்ந்த 1,65,000 பொதுமக்கள் உணவின்றி வாடும் நிலை: ஊடகங்களுக்கு புலிகள் அறிக்கை
 
[ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009,  ]
 
முல்லத்தீவு மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய, மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாரிய நெருக்கடியை மக்கள் எதிர்கொள்வதாகவும் விடுதலைப் புலிகள் மின் அஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தற்போது அங்கு 40,000 குடும்பங்களைச் சேர்ந்த 1,65,000 பொது மக்கள் வசித்து வருவதாகவும், ஏற்கனவே கையிருப்பிலுள்ள பொருட்கள் குன்றி வரும் நிலையிலும் புதிய வழங்கல்களை அனுப்ப முடியாத நிலையிலும் அங்கு மக்கள் உணவின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் புலிகள் கூறியுள்ளனர்.

இம்மாதம் 4 ஆம் திகதிக்குப் பின் அப்பகுதிக்கு உணவுப் பொருட்கள் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும், 11 ஆம் திகதி முதல் உலர் உணவுகளை வழங்குமாறு உள்ளூர் அதிகாரிகள் கோரியுள்ளதாகவும், தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான உணவு வழங்கல்களின் போது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அதன் காரணமாக உணவுப் பொருள் வரவு தட்டுப்படுவதாகவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் உள்ள மக்கள் நாளாந்தம் ஒருவேளை உணவை மட்டுமே கடந்த ஐந்து வாரங்களுக்கும் மேலாக உண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளையில், பாதுகாப்பு வலயத்தின் மீதான தாக்குதலை சிறிலங்கா படையினர் தொடங்கிய பின்னர் ஒருவேளை உணவைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவே வன்னியில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் உள்ளனர்.
இதன் பின்புலத்தில் அங்குள்ள மக்களுக்கு உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் உணவு வழங்கும் நடவடிக்கையை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அங்கு ஒரு குழுவை அனுப்புவதாக அறிவித்துள்ளதையும் விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online