வன்னியில் சிறிலங்கா படையினரின் தொடர் தாக்குதல்களில் கடந்த 3 நாட்களில் 90 பொதுமக்கள் கொலை; 195 பேர் காயம்

[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2009, ]

வன்னியில் சிறிலங்கா அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதிகளில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆடலறி, பல்குழல் பீரங்கி, 50 கலிபர் மற்றும் ரொக்கட் லோஞ்சர் தாக்குதல்களில் கடந்த 3 நாட்களில் 90 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 195 பேர் காயமடைந்துமுள்ளனர். என மருத்துவ பணியாளர்கள், மனிதாபிமான தொண்டர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இவற்றில் கடந்த புதன்கிழமையன்று 33 பொதுமக்கள் கொல்லப்பட்டும், 78 பேர் காயமடைந்துமுள்ளனர்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று 31 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 70 பேர் காயமடைந்துமுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை 26 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 47 பேர் காயமடைந்துமுள்ளனர்.

இத் தாக்குதல்களில் படுகாயமடைந்த 450 நோயாளர்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கப்பல் மூலம் புல்மோட்டைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

அதேவேளை செஞ்சிலுவைச் சங்கம் வன்னிக்கு சிறுவர்களுக்கான அங்கர் பால்மா, திரிபோஷா மற்றும் சோயா உள்ளிட்ட 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை கப்பலில் கொண்டுவந்துள்ளது.

இவற்றுடன் 7 வகையான மருத்துவப் பொருட்களும் நேற்று முன்தினம் வன்னிக்கு கப்பலில் எடுத்து வரப்பட்டதாக மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கப்பலில் உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்ததும் பொதுமக்கள் விநியோக நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online