வன்னியில் 48 மணி நேரத்திற்குள் 162 பேர் படுகொலை, 251 பேர் படுகாயம்: தவிட்டை உண்ணும் மக்கள்
 
[ வியாழக்கிழமை, 07 மே 2009,  ]
 
வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழர்கள் 162 பேரின் உயிர்களை சிறிலங்கா படையினர் பறித்து, இனவழிப்பை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.
இன்றும் (வியாழக்கிழமை) சிறிலங்கா படையினர் கடுமையான தாக்குதலை தொடுத்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை கடுமையான அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். தொடர்ச்சியாகப் பதுங்குகுழிகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே நேற்றும், நேற்று முன்னாளும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான் தாக்குதல், பல்குழல் எறிகணை, வெள்ளைப் பொஸ்பரஸ் இரசாயனக் கணை, நச்சுவாயுத் தாக்குதல், துப்பாக்கிச்சூடு என்பவற்றில் அப்பாவிப் பொதுமக்கள் 162 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) காலை 11:25 முதல் நண்பகல் 12:15 வரையான குறுகிய நேர இடைவெளியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 6 தடவைகளுக்கு மேல் சிறிலங்கா படையினர் குண்டுகளை மழையெனப் பொழிந்து வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் பொதுமக்கள் 84 பேர் உடல் சிதறியும், உடல் கருகியும் அகோரமாகக் கொல்லப்பட்டதுடன், மேலும் 37 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் மட்டும் முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்கா படையினரால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இரசாயனக் கணைகளும், பீரங்கிக் கணைகளும், கொத்துக் குண்டுகளும் மழையெனப் பொழியப்பட்டதில் 78 தமிழ் உறவுகள் பலியானதுடன், 214 பேர் படுகாயமடைந்திருந்தனர்.

பாதுகாப்பு வலயம் மீதான சிறிலங்கா படையினரது இவ்வாறான கொடூர தாக்குதல்களின்போது அங்கிருந்த 20ற்கும் மேற்பட்ட தறப்பாள் வீடுகளும், 14 ஊர்திகளும் எரிந்து நாசமாகியுள்ளன.

ஊர்தி ஒன்றின் மீது பொஸ்பரஸ் இரசாயனக் கணைகள் வீழ்ந்து வெடித்ததில் அதன் கீழ் அடைக்கலம் புகுந்திருந்த 14 உறவுகள் அந்த இடத்திலேயே உடல் கருகிப் பலியாகியிருந்தனர்.

வன்னியில் தற்பொழுது மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், கடற்கரை மணலில் பதுங்குகுழிகளில் தஞ்சம் கோர முடியாத நிலை அந்த மக்களுக்கு ஏற்பட்டிருப்பதுடன், அவ்வாறு தண்ணீருக்குள் தஞ்சம் கோருபவர்களும் மருந்துகள் அற்ற நிலையில் தொற்றுநோய் அபாயங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை நாட்களும் ஒருவேளைக் கஞ்சியைக் குடித்து தம் உயிர்வாழ்வை காப்பாற்றி வந்த மக்கள் தற்பொழுது அதுகூட இல்லாது தவிட்டில் தண்ணீரை ஊற்றிக் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆலைகளில் உள்ள உமியை எடுத்து, அதில் உள்ள குறுனி அரிசியையும், தவிட்டையும் தவர்த்தி எடுத்து அதனை உணவாகவும், தென்னை, பனை குருத்துக்களை எடுத்து அதனை உணவாகவும் உட்கொள்ளும் நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் இந்த உணவுகூட இல்லாது போகும் அபாயம் காணப்படுவதால், அந்த மக்களை பட்டினி அவலத்தில் இருந்து காப்பாற்ற புலம்பெயர்ந்த மக்கள் தமது போராட்டங்களுக்கு பலம் சேர்க்க வேண்டும் என, வன்னி மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online