கனரக ஆயுத தவிர்ப்பு காலத்தில் படையினரால் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது 5600 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன: 200 பொதுமக்கள் கொலை; 1000 ற்கு அதிகமானோர் காயம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009,  ]

கனரக ஆயுத தவிர்ப்பு நடைமுறையில் உள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை  மாலை 6 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிவரையிலான 17 மணி நேர காலப்பகுதியில், சிறிலங்காப் படையினரால் முள்ளிவாய்க்கால் உட்பட்ட மக்கள் பாதுகாப்பு வலய பிரதேசங்கள் மீது 5600 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இந்தக 17 மணிநேர காலப்பகுதியில் சிறிலங்கா படையினரால் 2600 பல்குழல் பீரங்கி குண்டுகள், 1000 ஆட்லறி எறிகணைகள், மற்றும் 2000 மோட்டார் குண்டுகள் என்பன பொதுமக்கள் செறிவாக வாழும் பாதுகாப்பு வலய வாழ்விடங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால், தாழம்பன்,ஓட்டைப்பானையடி மற்றும் இரட்டை வாய்க்கால் ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்கள் மீதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதன்போது சுமார் 200 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மூன்று மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்களும் இரட்டை வாய்க்கால், ஓட்டைப்பானையடி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசியுள்ளதாக விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் காயமடைந்தவர்களுக்கு திலீபன் மருத்துவ மையங்கள், மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ நிலையங்கள், முதலுதவி நிலையங்கள், முள்ளிவாய்க்கால் மருத்துவமனை, முல்லை, கிளி. மாவட்ட சுகாதார பிராந்திய சேவை நிலையங்கள் போன்றவற்றில் கடந்த 3 நாட்களில் மாத்திரம் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
எறிகணை வீச்சுகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் உயிர்சேதங்கள் தொடர்பான உண்மை தகவல்களை பெறமுடியவில்லை.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online