'பாதுகாப்பு வலய' தாக்குதலுக்கு படையினர் வகுக்கும் புதிய திட்டம்
[ திங்கட்கிழமை, 04 மே 2009,  ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலய'த்தின் மீது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர், அதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையடுத்து தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்கான புதிய உபாயம் ஒன்றைக் கையாள்வதற்குத் தயாராகி வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான பாரிய முன்நகர்வை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர், தரைவழியாக முன்நகர முனையும் இரண்டு முனைகளிலும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பதாகத் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரை மணலும், புலிகள் அமைத்திருக்கும் பாரிய மணல் அணைகளைத் தாண்டிச் செல்வதும் அதில் பெருமளவுக்குப் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளும் படையினரின் முன்நகர்வை பெரும் சோர்வை ஏற்படுத்தும் ஒன்றாக்கியிருக்கின்றது எனவும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியைக் கைப்பற்றும் நோக்கிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆவது, 58 ஆவது படைப்பிரிவுகளுடன் சிறப்புப் படைப்பிரிவு - 8 ஆகியன காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவுக்கு அருகே உள்ள வட்டுவாகல் பகுதியில் இருந்து வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியை இலக்கு வைத்து ஒரு முனையில் இந்தப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இப்பகுதியில் பாரிய மணல் அணையும், அந்தப் பகுதியில் புதைக்கப்பட்டிருக்கும் பெருந்தொகையான கண்ணிவெடிகளும் படையினரின் முன்நகர்வினை தடுத்து நிறுத்தியிருக்கின்றது.
இதேவேளையில் முல்லைத்தீவின் வடபகுதியில் இருந்து தென்பகுதியை நோக்கி இராணுவம் மேற்கொண்டு வரும் முன்நகர்வை பற்றிக் குறிப்பிடும் போது அதுவும் குறிப்பாக தரைப்படையைப் பொறுத்தவரையில் அந்தப் பகுதி ஒரு கடினமான தெரிவுதான் என இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களைப் பொறுத்தவரையில் முல்லைத்தீவுக் கரையோரப் பகுதிகளில் கடும் காற்று புழுதியைக் கிளப்பிவிடுவதுடன், பெரும் மழை ஒன்று இல்லையென்றால் வெய்யில் பெரும் பிரச்சினையாகவே இருக்கும் என்பது அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகளுக்குத் தெரியும்.
இந்தக் கடுமையான நிலைமைகளுக்கு மத்தியிலும் படையினர் இரண்டு முனைகளிலும் 50 மீற்றர் தூரத்துக்கு முன்னேறியிருப்பதாகவும் இராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரை மணலும், அதில் பெருமளவுக்குப் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளும் படையினரின் முன்னேற்றத்தை பெரும் சோர்வை ஏற்படுத்தும் ஒன்றாக மாற்றியிருக்கின்றது எனவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையில் 'பாதுகாப்பு வலயம்' மீதான முதலாவது கட்டத் தாக்குதலில் இருந்து முற்றிலும் புதிதான உபாயம் ஒன்றைக் கையாள்வதற்கு படையினர் தயாராகிவருகின்றார்கள் என இராணுவ வட்டாரங்களை ஆதாரம் காட்டி வெளியான சில செய்திகள் தெரிவிக்கின்ற போதிலும் எவ்வாறான உபாயத்தைப் படையினர் கையாளவுள்ளார்கள் என்பதையிட்டு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online